சென்னை: கடந்த அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்புக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி அனுமதி வழங்காததால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், நவம்பர் 6 ஆம் தேதி அணிவகுப்பு அனுமதியளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கடலூர், பெரம்பலூர் கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்க தயாராக இருப்பதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்த உளவுத்துறை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை பார்த்த பிறகு உத்தரவு பிறப்பிப்பதாக கூறிய நீதிபதி, விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உளவுத்துறை அறிக்கையை ஆய்வு செய்ததில் 2007, 2008ஆம் ஆண்டுளில் பதிவான வழக்குகளைச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும், அதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார்.
பின்னர், உளவுத்துறை அறிக்கையில் பதட்டம் நிறைந்த பகுதிகளாக சுட்டிக்காட்டப்பட்ட கோவை, பொள்ளாச்சி, மேட்டுபாளையம், பல்லடம், நாகர்கோவில், அருமனை ஆகிய 6 இடங்களில் அணிவகுப்புக்கு அனுமதி மறுத்தது சரியே என உத்தரவிட்ட நீதிபதி, இந்த பகுதிகளில் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி இரண்டு மாதங்களுக்குப் பின் விண்ணப்பிக்கலாம் எனவும், அவற்றை பரிசீலித்து தகுந்த உத்தரவை அதிகாரிகள் பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.