தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழை நீர் வடிகால் சுத்தம் செய்வதற்கான டெண்டர் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு - சென்னை

மழை நீர் வடிகால்களை சுத்தம் செய்வதற்கான டெண்டரின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 24, 2023, 10:26 PM IST

சென்னை: மீனவ தந்தை கே.ஆர்.செல்வராஜ் குமார், மீனவர்கள் நலச் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் தியாகராஜன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். கடந்த ஆண்டு பருவ மழையின் போது மழைநீர் வடிகால்களில் உள்ள அடைப்புகளை அகற்றி, எவ்வித இடையூறும் இல்லாமல் மழைநீர் அருகில் ஓடும் ஆறுகளில் கலக்கும் வகையில், 20 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி டெண்டரை அறிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள மழை நீர் வடிகால்களுக்கான 122 பணிகளை கொள்ள டெண்டர்கள் அறிவிக்கப்பட்டது. பின்னர் உடனடியாக பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டதாகவும், ஆனால் 6 மாதங்கள் ஆகியும் பணிகளை முடிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

ஆனால் பணியை முடித்ததாக கூறி டெண்டருக்கான தொகையை பெற்றுக் கொண்டு அரசின் கருவூலத்துக்கு இழப்பீடு ஏற்படுத்துவதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். பணிகளை முடிக்காதவர்களுக்கு டெண்டர் தொகை வழங்கப்படுவதை தடுக்க உத்தரவிட வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான குறுகிய கால டெண்டர் அடிப்படையில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது எனவும், பணிகளும் முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து யாருக்கு டெண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது? இதுவரை எத்தனை மாவட்டங்களில் பணிகள் முடிக்கப்பட்டது? மழை நீர் வடிகால்களை சுத்தம் செய்வதற்கான நிலுவையில் உள்ள பணிகள் என்ன? என்பன தொடர்பான முழுமையான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: ராகுல் காந்தியைப் பார்த்தால் பாஜகவுக்கு அச்சம் - முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details