சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் வரம்புக்குள் கொண்டு வரும் வகையில், கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அப்போதைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2011ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோதே, அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் கொண்டு வந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த திருத்தத்தை எதிர்த்தும், அதை 2011ஆம் ஆண்டிலிருந்து முன் தேதியிட்டு அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜன.5) விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவின்படி அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசு ஊழியர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால், அவர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் கொண்டு வந்து, அரசுப் பணியாளர் தேர்வாணைய விதிகளில் திருத்தம் கொண்டு வந்ததை தன்னிச்சையானது என கூற முடியாது" என்று தெரிவித்து திருத்த விதிகளை உறுதி செய்து தீர்ப்பளித்தது.