சென்னை:அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அளித்த புகார் மீது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி, 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. அதன்படி அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று (ஜூலை 13) விசாரணைக்கு வந்தது.
அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் ஏற்கனவே தாக்கல் செய்யபட்ட ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வாதிட்டார். ஊழல் கண்காணிப்பு ஆணையர் என்பவர் விசாரணை அதிகாரி இல்லை என்றும், லஞ்ச ஒழிப்பு துறை அளிக்கும் அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும் நடைமுறை மட்டுமே அவருக்கு உள்ளது என விளக்கம் அளித்தார். லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி புகாருக்கு எதிர்மறையான அறிக்கையை அளித்த பிறகு அதை மீண்டும் ஆராய தேவையில்லை எனவும் வாதிட்டார்.