சென்னை:தியாகராய நகரில் உள்ள அப்துல் அஜிஸ் தெருவில் கிரிஜா என்ற மூதாட்டி இவரது வீடுகளை வாடகைக்கு விட்டு வசித்து வருகிறார். இவரது வீட்டில் வசித்து வந்த திமுக வட்டச் செயலாளர் ராமலிங்கம் சில காலங்களாக வாடகை தராமல் இருந்து வந்துள்ளார். இதனால் கிரிஜா மூதாட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த 2017ல் வீட்டை காலி செய்யும்படி உத்தரவிட்டனர்.
ஆனால், ராமலிங்கம் வீட்டை காலி செய்யாததால், மாவட்டச்செயலாளருக்கு எதிராகக் கிரிஜா, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், 48 மணி நேரத்துக்குள் காவல்துறையினரை அனுப்பி, கிரிஜாவின் வீட்டிலிருந்து ராமலிங்கத்தை வெளியேற்றி, அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யச் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ராமலிங்கம் வீட்டை காலி செய்து விட்டதாகவும், வீடு தற்போது உரிமையாளர் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும், காவல்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை ஒப்புக்கொண்ட கிரிஜா தரப்பில், வாடகை பாக்கி இன்னும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.