தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 27, 2021, 7:30 PM IST

ETV Bharat / state

கழிப்பறை மேற்கூரை இடிந்து விழுந்து கட்டட தொழிலாளி இறப்பு: ரூ.27 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: பேருந்து நிலைய கழிப்பறை மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த கட்டட தொழிலாளி குடும்பத்துக்கு, 27 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க பல்லடம் நகராட்சிக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Mhc
Mhc

கடந்த 2018ஆம் ஆண்டு, மே 12ஆம் தேதி இரவில் பெய்த மழையில் பல்லடம் பேருந்து நிலையத்திலுள்ள கழிப்பறைக்குச் சென்ற அசோக்குமார் மீது மேற்கூரை இடிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.

நகராட்சி நிர்வாகம் கழிப்பறையை முறையாகப் பராமரிக்காததே தன் கணவரின் உயிரிழப்பிற்கு காரணம் என்றும், கொத்தனார் வேலை செய்த வந்த அவரின் மரணத்திற்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரியும், அவர் மனைவி சரஸ்வதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு மற்றும் பல்லடம் நகராட்சி தரப்பில், கட்டடம் கட்டப்பட்டு 30 ஆண்டுகள் ஆனாலும், உறுதியாக இருப்பதாக அதை ஆய்வு செய்த அலுவலர்கள் அறிக்கை அளித்து இருப்பதால், மேற்கூரை இடிந்து விழுந்ததற்கு நகராட்சி பொறுப்பாகாது என்று தெரிவிக்கப்பட்டது

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், கட்டடத் தொழிலாளி அசோக்குமாரின் உயிரிழப்பிற்கு நகராட்சி அலுவலர்களின் கவனக் குறைவே காரணம் என்பதை சுட்டிக்காட்டி, அவரது மரணத்திற்கு இழப்பீடு வழங்க பல்லடம் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டனர்.

அதன்படி, 27 லட்ச ரூபாய் இழப்பீட்டை நிர்ணயித்த நீதிபதிகள், அதில் 10 லட்ச ரூபாயை மனைவி சரஸ்வதிக்கும், தலா 5 லட்ச ரூபாயை இருமகள்கள் மற்றும் மகனுக்கும், 2 லட்ச ரூபாயை அசோக்குமாரின் தாயாருக்கும் 8 வாரத்திற்குள் வழங்க வேண்டுமென பல்லடம் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இழப்பீடு வழங்கப்பட்டது தொடர்பான அறிக்கையை ஜூன் 21-ஆம் தேதி தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு உள்ளனர். உலகில் மழையின்றி உயிர் வாழ முடியாது என்றாலும், அம்மழையால் விலை மதிப்பில்லாத ஒரு உயிர் பறிபோயுள்ளதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details