தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முரசொலி நிலம் விவகாரம்; ஆவணங்கள் தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு! - Madras High Court

Murasoli Land issue: முரசொலி அறக்கட்டளை அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக வருவாய்த்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai-high-court
சென்னை உயர் நீதிமன்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2024, 9:25 PM IST

சென்னை:திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான "முரசொலி"-யின் அறக்கட்டளை, சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1,825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன், கடந்த 2019ஆம் ஆண்டு தேசிய பட்டியலின ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் மீதான விசாரணைக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால், பட்டியலின ஆணையம் விசாரிக்க முடியாது எனக் கூறி, முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், முரசொலி சொத்து மாதவன் நாயர் என்கிற நில உரிமையாளரிடம் இருந்து, அஞ்சுகம் பதிப்பகத்திற்கு விற்பனை பத்திரம் மூலம் வாங்கப்பட்டுள்ளதாகவும், 1974ஆம் ஆண்டு முதல் அந்த நிலத்தின் உரிமை 56 ஆண்டுகளாக முரசொலி அறக்கட்டளையின் வசம்தான் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னையில் பஞ்சமி நிலமே இல்லை என அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவே சட்டப்பேரவையில் அறிவித்திருந்ததாகவும், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பெற்ற வெற்றியை சகித்துக்கொள்ள முடியாமல், பாஜக இந்த புகாரை அளித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, முரசொலி அறக்கட்டளை தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி வாதிட்டார். அப்போது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி அலுவலகம், பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக விசாரணை நடத்த வேண்டுமென புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பஞ்சமி நிலம் என்பதற்கான எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யாமல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை பட்டியல் இனத்தைச் சேராத, பாஜகவைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், அதே கட்சியைச் சேர்ந்தவரான ஆணைய துணைத் தலைவர் எல்.முருகன் விசாரணைக்கு ஏற்று, நோட்டீஸ் அனுப்பியதாக வாதிட்டார்.

பட்டியல் இனத்தவருக்கு வழங்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்ததாக குற்றம் சாட்டுவதால், தமிழக அரசு தரப்பை இந்த வழக்கில் இணைக்கக்கோரி மனுத் தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவித்தார். தங்கள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம் என்பதற்கான பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

ஒரு மாநிலத்திலிருந்து வரும் புகாரை, அதே மாநிலத்தைச் சேர்ந்தவர் விசாரிக்க முடியாது என்கிற விதியை மீறி, தங்களுக்கு எதிரான புகாரை எல்.முருகன் விசாரணைக்கு ஏற்றதே தவறு என்றும் வில்சன் குறிப்பிட்டார். பட்டியலின மக்களின் உரிமைகள் பறிக்கப்படும்போதுதான், எஸ்.சி. ஆணையம் தலையிட்டு தீர்வு காண முடியும் என்றும், உரிமையியல் வழக்கு தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றங்கள்தான் தீர்வு காண முடியும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

பின்னர் ஆணையத்தின் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, பஞ்சமி நிலம் குறித்த புகாரைத்தான் விசாரிக்க வேண்டும் என்பதை உணர்ந்து விசாரணை மட்டுமே நடத்துவதாகவும், சொத்தின் மீதான உரிமை யாருக்குள்ளது என தீர்மானிக்கும் வகையில், நீதிமன்றத்தின் பணியை ஆணையம் செய்யாது என தெரிவித்தார்.

இதையடுத்து, முரசொலி நிலம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் உள்ள வருவாய்த்துறை ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நாளை (ஜன.4) நீதிபதி எஸ் எம்.சுப்ரமணியம் தள்ளிவைத்துள்ளார்.

இதையும் படிங்க:நாகை அருகே படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் மாயம்!

ABOUT THE AUTHOR

...view details