தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மெரினா கடற்கரை லூப் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு! - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை காவல்துறை பாதுகாப்புடன் அகற்ற மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras
சென்னை

By

Published : Apr 11, 2023, 5:10 PM IST

சென்னை: சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் லூப் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள மீன்கடைகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. அதில், சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை, அப்பகுதி மீனவர்கள் ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைத்துள்ளதாகவும், ஐஸ் பெட்டிகளை சாலையோரம் வைத்தும், வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்துவதாலும் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு எட்டு மணி வரையும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருவதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன் கடைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கும், மாநகராட்சிக்கும் உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை கோரியுள்ளது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பாலாஜி அமர்வில் இன்று(ஏப்.11) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மீன் வியாபாரிகளுக்கான கடைகள் கட்டப்பட்டு வருவதாகவும், விரைவில் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், "முதலில் லூப் சாலை ஆக்கிரமிப்பா? என்பதை தீர்மானிக்க வேண்டும். அரசு சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதில் ஆக்கிரமிப்பு மீது நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினால், மக்களிடம் கூட்டம் நடத்தப்பட்டதாக அரசு ஏன் பதிலளிக்கிறது? - எந்த அடிப்படையில் மக்களை ஆக்கிரமிப்பு செய்ய அனுமதிக்கிறீர்கள்? அனைத்து அதிகாரங்களும் இருந்தும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு என்ன தயக்கம்? - ஆக்கிரமிப்புகள் இருப்பதாக தெரிந்தும், சாலையோர உணவகங்களுக்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது?" என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

மக்கள் சுதந்திரமாக பயன்படுத்த முடியாத நிலையில் சாலை உள்ளது, இதே நிலை தொடர்ந்தால் காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை ஆக்கிரமிப்பு செய்ய அனுமதிக்க முடியாது என்றும், மனிதாபிமான அடிப்படையில் சாலையோரங்களை அனுமதிக்கலாம்- ஆனால் சாலையை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தனர். இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்வது இல்லை என்றும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை காவல்துறை பாதுகாப்புடன் அகற்ற மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.

மேலும், மாநகராட்சி சார்பில் எத்தனை நபர்களுக்கு கடைகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது? என்பது குறித்தும், லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும் ஏப்ரல் 18ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கரோனாவால் பலியான 5 பேருக்கும் இணை நோய் இருந்தது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details