சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்வது தொடர்பாகக் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளிக்குத் தடை விதிக்கக் கோரி, சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில், நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி, பட்டாசு விற்பனைக்காகக் கோரப்பட்ட இரு ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டு, இறுதியாகக் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதாகவும், அதற்கான 20 லட்சம் ரூபாயில் முன்பணத் தொகை 2 லட்சம் ரூபாயுடன், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எந்த தகுதியும் இல்லாத "சென்னை பட்டாசு வியாபாரிகள் நலச் சங்கம்" என்ற புதிய சங்கத்தை ஒப்பந்தப்புள்ளியில் கலந்து கொள்ள அனுமதித்ததாகவும், போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த அந்த சங்கத்தை ஒப்பந்தப்புள்ளியில் கலந்து கொள்ள அனுமதித்தது ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்ட விதிகளுக்கு முரணானது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று (அக்.30) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம். விஜய் ஆனந்த், தங்களது சங்கத்திற்கு விற்பனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் போதிய அனுபவம் உள்ள நிலையில், பதிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளே ஆன புதிய சங்கத்திற்கு ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கியது சட்டத்திற்கு முரணானது என வாதிட்டார்.