சென்னை:நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான ஜெயிலர் படத்தில் அதிக வன்முறை காட்சிகள் நிறைந்து இருப்பதாகக் கூறி, வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
திரைப்படத்தில் அதிக அளவில் வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், 12 வயதுக்கு குறைவானவர்களும் பார்க்கும் வகையிலான 'யுஏ' சான்றிதழ் வழங்கியிருப்பது தவறானது என்றும் அந்த மனுவில் கூறிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த திரைப்படத்தை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, லட்சக்கணக்கான பேர் திரைப்படத்தை கண்டுள்ளதாக தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ஏ (A) சான்றிதழ் வழங்கப்பட வேண்டிய இந்த திரைப்படத்திற்கு யுஏ (UA) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் வன்முறை காட்சிகள் அதிக அளவில் இடம்பெற்று இருப்பதாகவும் தெரிவித்தார்.