சென்னை: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே முனியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் ராஜ்குமார். இவர், நீடாமங்கலம் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், அக்டோபர் மாதம் கட்டையடி என்ற இடத்தில் கொடூரமான முறையில் ராஜ்குமார் கொலை செய்யபட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அரித்துவாரமங்கலம் உதவி ஆய்வாளர் அன்பழகன் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இந்த விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரின் மனைவி சந்தியா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “கொலையில் ஈடுபட்ட நபர்களை காப்பற்றுவதற்தாக அனைத்து ஆதாரங்களையும் காவல்துறையினர் அழித்ததாகவும், கொலைக்கு சம்பந்தமில்லாத மூன்று பேரை தற்போது சிறையில் அடைத்துள்ளனர்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு நீதிபதி ரவீந்திரன் முன்பு இன்று (டிச.24) விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை மூன்று வாரத்திற்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க:பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜா தியானம் செய்ய அனுமதி