சென்னை:முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட பொள்ளாச்சி அதிமுக நிர்வாகி அருண்குமார் மன்னிப்பு கேட்பது கண்துடைப்பாக இருக்கலாம் என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அவர் தவறை மீண்டும் செய்யப் போவதில்லை என்பதை உணர வேண்டும் என அறிவுறுத்தி ஜாமீன் வழங்கியுள்ளது.
மதுபானங்கள் விலை உயர்வைக் கண்டித்து, தலையில் மதுபாட்டிலை வைத்துக் கொண்டு மது குடிப்பவர் ஒருவர், தமிழக அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் அவதூறான வார்த்தைகளால் விமர்சிக்கும் வீடியோவை, பொள்ளாச்சி அ.தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகி அருண்குமார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இது தொடர்பாக பொள்ளாச்சி தி.மு.க வழக்கறிஞர் அணியினர் அளித்த புகாரில், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் அருண்குமார் மீது சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்புதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடந்த அக்டோபர் 5ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:கந்த சஷ்டி; வேலூர் முருகன் கோயில்களில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்!
இந்த வழக்கில், ஜாமீன் கோரி அருண்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சமூக வளைத்தளத்தில் பரவிய வீடியோவை, தான் ஃபார்வர்டு மட்டுமே செய்ததாகவும், எந்த வித விசாரணையும் மேற்கொள்ளாமல் அரசியல் உள்நோக்கத்துடன் காவல்துறையினர் தன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், மனுதாரர் மன்னிப்பு கோர வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், வெறும் கண்துடைப்புக்காக மட்டும் மன்னிப்பு கேட்கலாம் என கருதுவதாக தெரிவித்தார். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடப் போவதில்லை என மனுதாரர் இதயப்பூர்வமாக உணர வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, கைதாகி சிறையில் இருந்தபோது திருந்தியிருப்பார் என்றும், குடும்பத்தினர் உள்ளிட்ட அனைத்து மனித உயிர்களையும் மதிப்பார் என்றும் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் தினமும் காலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும், ஆதாரங்களை அழிக்ககூடாது, விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அருண்குமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:ஈரோட்டில் தலைமுடியைப் பிடித்து பெண்கள் சண்டை.. வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?