சென்னை:மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி பேரூராட்சிக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்பட்டன. 10ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமியும், சுயேச்சையாக போட்டியிட்ட பழனிச்செல்வியும் தலா 284 வாக்குகளைப் பெற்றனர்.
இதனால் குலுக்கல் மூலம் வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பழனிச்செல்வி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார்.
தேர்தல் முடிவை மாற்றியது நிரூபணம்
இதுசம்பந்தமாக தேர்தல் அலுவலர் பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்கக்கோரி பழனிச்செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு, குலுக்கல் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று (மார்ச்.3) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வீடியோ பதிவுகள் தாக்கல் செய்யப்பட்டன. அதைப் பார்வையிட்ட நீதிபதிகள், மனுதாரரை வெற்றி பெற்றவராக அறிவித்திருக்க வேண்டும் எனவும், தேர்தல் முடிவை மாற்றியது நிரூபணமாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.