சென்னை: தமிழகத்தில் யானைகள் வழித்தடங்களை பாதுகாப்பது, மலைவாசஸ்தளங்கள் பாதுகாப்பது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் வியாழன் அன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, யானைகள் வழித்தடங்களில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளில் 180 இணைப்புகளில் 150 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மற்றவை வீட்டு உபயோகத்திற்கான இணைப்பு என்பதால் துண்டிக்கவில்லை என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தென் மன்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவையடுத்து செங்கற்களை எடுக்க ஏராளமான வாகனங்கள் மற்றும் பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இரவு நேரத்தில் செங்கற்களை எடுக்க உயர் மின் அழுத்த மின்சார விளக்குகள் தற்போதும் பயன்படுத்தப்படுவதாகவும், தற்காலிகமாக போடப்பட்ட காட்டுப்பாதையை விலங்குகளும் பயன்படுத்துவதால் விலங்குகள் மற்றும் மனித மோதல்கள் அடிக்கடி
ஏற்படுகின்றன. கடந்த 1 மாதத்தில் யானை தாக்கியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து, யானை வழித்தடங்கள் தடைபட்டுள்ளதா? செங்கல் சூளைக்கான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதா? அனுமதி இல்லாமல் புதிய பாதைகள் போடப்பட்டதா? என்பதை நேரில் ஆய்வு செய்து, நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டது கண்டறியப்பட்டால் அரசின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டனர்.