சென்னை : பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற உள்ள என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி, என்எல்சி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.
போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளர்கள் நிறுவனத்திற்கு வரும் பணியாளர்கள், அதிகாரிகளை தடுத்து வேலை செய்ய அனுமதிப்பதில்லை என என்எல்சி தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து போராட்டம் நடத்த தனி இடத்தை அடையாளம் காண சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தனி இடத்தில் போராட்டம் நடந்து வந்தது.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் என்எல்சி நிர்வாகத்துக்கு இடையிலான பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிப்பது குறித்து பதிலளிக்கும் படி என்எல்சி மற்றும் மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தொழில் தகராறு சட்டத்தின் படி உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியை பேச்சுவார்த்தைக்கு நியமிக்க முடியாது என்று என்எல்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் ஒப்பந்த தொழிலாளர்கள் தரப்பில் நீதிமன்ற நிவாரணத்தை எதிர்பார்த்து போராட்டத்தை திரும்ப பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.