தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக விதிகளை திருத்த தடை கோரிய மனு நாளை விசாரணை - நடக்குமா பொதுக்குழு ?

அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி தாக்கல் செய்த கூடுதல் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் நாளை (ஜூன் 22) விசாரிக்கிறது.

அதிமுக விதிகளை திருத்த தடை கோரிய மனு நாளை விசாரணை - நடக்குமா பொதுக்குழு ?
அதிமுக விதிகளை திருத்த தடை கோரிய மனு நாளை விசாரணை - நடக்குமா பொதுக்குழு ?

By

Published : Jun 21, 2022, 12:01 PM IST

சென்னை:அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. இதனையடுத்து, இது அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் கூறி அக்கட்சி உறுப்பினர்களான ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த மனுவில், பொதுச் செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த அதிமுக உள்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் புதிய நியமனங்கள் மேற்கொள்ளத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களைக் கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்குத் தடை விதிக்க கோரி கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அதில், கட்சி விதிகளின்படி நிர்வாக ரீதியாக பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களான பொதுக்குழு மற்றும் செயற்குழுவைக் கூட்டுதல், கட்சி ஆட்சிமன்ற குழு அமைத்தல் மற்றும் உட்கட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிடுதல் போன்றவற்றை அதிமுக கட்சி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் செயல்படுத்தத் தடை விதிக்கக் கோரப்பட்டுள்ளது.

மேலும், கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வர தடை விதிக்க வேண்டும் எனவும், செயற்குழுவால் நியமிக்கப்பட்ட தற்காலிக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் பதவியில் நீடிக்க தடை விதிக்கவும், கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர்களை நீக்கவும், புதியதாகக் கட்சி பதவிகளில் நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் இந்த இடைக்கால மனுக்களில் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதிமுக விதிகளை திருத்த தடை கோரிய மனு நாளை விசாரணை - நடக்குமா பொதுக்குழு ?

இந்நிலையில் இன்று (ஜூன்.21) நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி இந்த கூடுதல் மனுக்களை நாளை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி நாளை (ஜூன் 22) இந்த வழக்குகளை விசாரிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளார்.

இதனிடையே, அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள் தனித்தனியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி தங்களின் ஆதரவு யாருக்கு என்பதைத் தெரிவித்து வருகின்ற நிலையில் இந்த வழக்குகளை விசாரிப்பதாக நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளது முக்கியத்துவம் வந்ததாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க: அதிமுகவை பலவீனப்படுத்த சிலர் முயற்சி.. அதிமுக எந்த காலத்திலும் வீழ்ந்ததாக சரித்திரம் கிடையாது - எடப்பாடி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details