சென்னை:இயக்குநர் கதிரேசன் இயக்கத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் பிரியா பவானிசங்கர் நடிப்பில் உருவாகியிள்ள படம் தான், ருத்ரன். இந்த படத்தின், இந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை, ‘ரெவன்ஸா குளோபல் வென்சர்ஸ்’ (Revanza Global Ventures) என்ற நிறுவனம் பெறுவது தொடர்பாக, ருத்ரன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்' நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது.
12 கோடியே 25 லட்சம் ரூபாய் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்த ரெவன்ஸா நிறுவனம், முதல் கட்டமாக 10 கோடி ரூபாய் செலுத்தியிருந்தது. இந்நிலையில், 4 கோடியே 50 லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் எனக் கூறிய தயாரிப்பு நிறுவனம், திடீரென இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
இப்படத்தை வெளியிட அனுமதித்தால், தங்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதால் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என ரெவன்ஸா குளோபல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, படத்தை ஏப்ரல் 24-ஆம் தேதி வரை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இடைக்காலத் தடையால் தங்களுக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தடையை நீக்கக்கோரி, படத் தயாரிப்பு நிறுவனமான ஃபைவ்ஸ்டார் நிறுவனத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, தடையை நீக்க வேண்டுமென படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், படத்தின் இந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை வேறு யாருக்கும் வழங்கக் கூடாது எனவும்; பிரச்னையை மத்தியஸ்தர் மூலம் பேசி தீர்த்துக்கொள்ள உத்தரவிட்டார்.
மேலும், ருத்ரன் படத்தை திரையரங்கம், ஓடிடி, சாட்டிலைட் ஆகியவற்றில் வெளியிட விதிக்கப்பட்டத் தடையை நீக்கியும் உத்தரவிட்டார். இதன் மூலம், திட்டமிட்டபடி ருத்ரன் திரைப்படம் நாளை (ஏப்ரல் 14) வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க:’சரக்கு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!