சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலின் நான்கு கோபுரங்களும் அமைந்துள்ள பகுதியிலும், கோயிலின் முதல் மற்றும் இரண்டாவது பிரகாரங்களிலும் அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்கு தடை விதிக்கக்கோரி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், பழமையான கோயில்களில் எந்த அனுமதியும் பெறாமல் கட்டுமானங்களை மேற்கொள்ளக் கூடாது என உயர் நீதிமன்றமே உத்தரவிட்டுள்ள போதும், அதை மீறி ஆறு அடிக்கு மேல் தோண்டப்பட்டுள்ளதாகவும், எந்த மாதிரியான பணிகள் நடக்கின்றன? என்பதே தெரியவில்லை எனவும், கோயிலுக்குள் இருந்த நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் R.மகாதேவன், P.D.ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை தரப்பில் சிதம்பரம் கோயிலில் கட்டுமானம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, கடந்த நவம்பர் 17ஆம் தேதி குழு அமைத்து அரசாணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைக்கேட்ட நீதிபதிகள் குழு ஆய்வு செய்ததா? என கேள்வி எழுப்பியபோது, இதுவரை ஆய்வு செய்யவில்லை என்றும், ஆனால் எந்த நேரத்திலும் குழு திடீர் ஆய்வில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பவர்கள் ஏன் சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தொடர்பாக வழக்குதொடர தயங்குகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
கோயிலின் உட்புறத்திலும், ராஜகோபுரம் அருகே கட்டுமானம் உள்ளதாகவும், அரசு தரப்பில் கூறுவது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது பொது தீட்சதர்கள் குழு தரப்பில், கடைகளோ, அன்னதானக் கூடமோ கட்டவில்லை என்றும், தற்காலிக அமைப்பில் அலுவலகம் தான் செயல்படுகிறது என விளக்கம் அளித்ததுடன் பக்தரை தாக்கியதாக குழுவிலிருந்து நீக்கப்பட்டவர் தான் தங்களுக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்வதாகவும் குறிப்பிட்டார்.