சென்னை: தமிழகத்தில் கோவில்களில் அர்ச்சகர் நியமனம் விதிகளை எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்பதால், எந்தெந்த கோவில்கள் எந்தெந்த ஆகமங்களைப் பின்பற்றுகின்றன என்பதை அடையாளம் காண உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் ஐந்து பேர் குழுவை நியமித்து உத்தரவிட்டது.
இக்குழுவில், குழு தலைவர் ஒப்புதலுடன் இரு உறுப்பினர்களை அரசு நியமிக்கவும் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், கோவில்களின் ஆகமங்களை அடையாளம் காண, அறநிலையத் துறை உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் சத்தியவேல் முருகன் தயாரித்த 50 கேள்விகளுக்கு விடையளிக்கும்படி, அனைத்து கோவில்களுக்கும் அறநிலையத் துறை ஆணையர் நவம்பர் 4ம் தேதியிட்ட சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
அவர் தனது மனுவில், கோவில்களின் ஆகமத்தை கண்டறிய உயர் நீதிமன்றம் நியமித்த குழுவின் அதிகாரத்தைப் பறித்துக் கொள்ளும் வகையில், சம்பந்தமில்லாத கேள்விகளுடன் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவின்படி இரு பிரதிநிதிகளை நியமிக்காத அரசு, அறநிலையத் துறை உயர்மட்ட ஆலோசனைக்குழு தலைவருக்கு அதிக அதிகாரம் வழங்கியுள்ளதாகவும், இது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆகமங்கள் பற்றி ஏதும் தெரியாத சத்தியவேல் முருகன், நடைமுறையில் இல்லாத தமிழ் ஆகமம் பற்றி தவறான பரப்புரை மேற்கொண்டு வருவதாகவும், ஆகமங்களை அறியாத அவர் தயாரித்த கேள்விகளுடன் கூடிய சுற்றறிக்கையை ரத்து செய்வதுடன், அவரை உயர் நீதிமன்றம் நியமித்த குழுவில் உறுப்பினராக நியமிக்கத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படாத நிலையில், குறிப்பிட்ட நபரை நியமிக்க கூடாது என முன்கூட்டியே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், கடந்த நவம்பர் 4ம் தேதி சுற்றறிக்கை வேறு பயன்பாட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும் தமிழக அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குறிப்பிட்ட அந்த சுற்றறிக்கை ஆகம விவரங்களை கோரும் வகையில் உள்ளதாக கூறி, ஆகமங்களை கண்டறிவது தொடர்பாக 50 கேள்விகள் எழுப்பி அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத் துறைக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க:தமிழ் பாடத்தை யார் வேண்டுமானாலும் நடத்த அனுமதிக்கலாமா? பாமக நிறுவனர் கண்டனம்