சென்னை:நாட்டு துப்பாக்கி, ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளுடன் நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் மற்றும் கபிலன் ஆகிய மூன்று பேரை கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம், சேலம் மாவட்டம் ஓமலூர் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு பின்னர், தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்ட நிலையில், சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கில் தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்த இறுதி அறிக்கையில், கைது செய்யப்பட்ட மூன்று பேரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் எனவும், ஆயுதப் போராட்டம் மூலம் இந்திய மற்றும் தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு இடங்களில் புரட்சி செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது.
சேலத்தில் உள்ள வணிக மணல் குவாரி மற்றும் டாஸ்மாக் கடைகள் மீது ஆயுதத் தாக்குதல் நடத்த மூவரும் திட்டமிட்டு இருந்ததாக இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி, மூவரும் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் இன்று(டிச. 16) விசாரணைக்கு வந்தது.