சென்னை: சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து, அப்பகுதி மீனவர்கள் மீன் கடைகள் அமைத்துள்ளதாகவும், அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், லூப் சாலையின் மேற்கு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்யவும், அங்குள்ள உணவகங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதா? என அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதாகவும், அப்பகுதியில் உள்ள மீனவர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் 75 மீன் கடைகள், 15 குடிசைகள், 21 பெட்டிக்கடைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி சார்பில் நேற்று(ஏப்.18) உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மீன் சந்தை அமைக்கும் வரை மீனவர்கள் குடியிருப்பில் இருந்து சாலைக்கு இடையில் உள்ள இடத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனவும், போக்குவரத்தை முறைப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மனுவாக தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பாலாஜி அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று(ஏப்.19) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சாலையின் மேற்கு பகுதியில் உள்ள நடைபாதையில் தற்காலிகமாக மீன்கடைகள் அமைக்கப்படுவதாகவும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஒழுங்குபடுத்தப்படும் எனவும், கலங்கரை விளக்கத்தின் பின்புறமும், சீனிவாசபுரத்தின் அருகிலும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்த இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.