சென்னை:மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக, கடந்த 2015ஆம் ஆண்டு 10 ஆயிரம் செவிலியர்கள் தொகுப்பூதிய முறையில் பணி அமர்த்தப்பட்டனர். 2 வருடங்கள் தொகுப்பூதிய பணி முடித்தபின், பணி நிரந்தரம் செய்யப்படும் என பணி ஆணை வழங்கப்பட்டது. ஆனால் 8 வருடங்கள் ஆகியும் 4 ஆயிரம் செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம், தொகுப்பூதிய செவிலியர்கள், நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக பணி செய்தால், அவர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறி, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்து நிரந்தர செவிலியர்களின் பணியுடன், தொகுப்பூதிய செவிலியர்கள் செய்யும் பணியை ஒப்பீடு செய்து, 6 மாதத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டுமென்று உத்தரவிட்டது.
ஆனால், நீதிமன்ற உத்தரவை அரசு நிறைவேற்றாததால், செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒவ்வொரு தொகுப்பூதிய செவிலியர்களையும் அவர்கள் செய்யும் பணி குறித்து ஆய்வு செய்து, நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டுமென்று, கடந்த 2022ஆம் ஆண்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து, நீதிமன்றம் பலமுறை அவகாசம் வழங்கியும் மற்றும் உத்தரவு பிறப்பித்தும், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் நடவடிக்கை எடுக்காததால், அவரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜன.6) விசாரணைக்கு வந்தது.