சென்னை: மேற்கு அண்ணா நகரைச் சேர்ந்த எஸ்.இளவேனில் என்பவர் தான் வசித்துவரும் அடுக்குமாடிக் குடியிருப்பில் நிறுத்திவைத்திருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்புடைய ராயல் என்பீல்ட் பைக்கை காணவில்லை எனக் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரில் நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்யவும், வாகனம் கிடைக்காவிட்டால் "வாகனத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை" எனச் சான்றிதழ் வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சந்திரசேகரன், வாகனத்தைத் திருடியவர்களைக் கைது செய்ய வேண்டும், காப்பீடுத் தொகைக்கு விண்ணப்பிப்பதற்காக "வாகனத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை" என காவல்துறை சான்றிதழ் வழங்க வேண்டுமென உத்தரவிட்டு, அதற்கு 4 வாரக் கால அவகாசம் வழங்கி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் இந்த உத்தரவை முறையாக அமல்படுத்தவில்லை என திருமங்கலம் காவல் ஆய்வாளர் வேல்முருகனுக்கு எதிராக இளவேனில் தாக்கல் செய்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி ஜி.சந்திரசேகரனிடம் விசாரணைக்கு வந்தது.அப்போது இளவேனில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் , வாகனத்தை கண்டுபிடிக்கவோ அல்லது சான்றிதழ் வழங்கவோ ஒரு மாத கால அவகாசம் வழங்கிய நிலையில், பல முறை கேட்டும், அதை வழங்க முன்வரவில்லை என்பதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் தண்டிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.