கோவைகவுண்டம்பாளையம் அரசு ஊழியர் குடியிருப்பில் இருந்த பழைய வீடுகள் இடிக்கப்பட்டு 1,848 குடியிருப்புகள் கட்டப்பட்டன. அந்த வீடுகளுக்கு கேபிள் டிவி இணைப்பு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்கக்கோரி ஏற்கனவே இணைப்புகளை வழங்கி வரும் ஸ்டார் சேனல், கேபிள் டிவி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
அதன் மனுவில், அனைத்து புதிய குடியிருப்புகளுக்கும் கேபிள் டிவி இணைப்புகளை வழங்குவதற்கான விண்ணப்பத்தை வங்கி உத்தரவாதத்துடன் சமர்ப்பித்தும், உத்தரவாதம் காலாவதியாகிவிட்டதாகக் கூறியும், வேறு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன், ஸ்டார் சேனலுக்கும், வீட்டு வசதி வாரியத்திற்கும் இடையில் இல்லாத ஒரு ஒப்பந்தத்தை அமல்படுத்த முடியாது எனவும், கேபிள் டிவி இணைப்பை வழங்க எந்த கேபிள் ஆபரேட்டரையும் நியமிக்க வீட்டு வசதி வாரியத்திற்க்கு அதிகாரம் உள்ளது எனக் கூறி, ஸ்டார் சேனல் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் அந்த உத்தரவில், தொலைக்காட்சி சேனல்களை பார்க்காமல் அரசு அதிகாரிகள் நிம்மதியாக இருப்பார்கள் என எண்ணி கேபிள் இணைப்பை மறுத்திருந்தால், அது விவேகமான அணுகுமுறையாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:வடிவேலு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோருக்கு போலி டாக்டர் பட்டம்? - அண்ணா பல்கலை. துணைவேந்தர் விளக்கம்