சென்னை:கடந்த ஜூன் 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக தலைமை தொடர்பான புதிய முடிவுகள் எடுக்க தடை கேட்டும், பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரியும் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க மறுத்து, வழக்கை ஜூலை 11ஆம் தேதி தள்ளிவைத்தார். இந்த உத்தரவை எதிர்த்து சண்முகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் தனித்தனியாக கையெழுத்திடப்பட்டு, இறுதி செய்யப்பட்ட 23 தீர்மானங்களை பொதுகுழுவில் முன்வைத்து, அவற்றில் எந்த முடிவையும் எடுக்கலாம் என்றும், மற்ற விவகாரங்களை ஆலோசிக்கலாமே தவிர முடிவெடுக்கக் கூடாது என உத்தரவிட்டது.
ஆனால் நீதிமன்றத்தில் தெரிவித்த 23 தீர்மானங்களை தவிர, நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக கருதி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருக்கு எதிராக சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.