சென்னை:பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கக் கோரி சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் எந்த விதியின் கீழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன? இடமாற்றம் மூலமாக நியமிப்பதாக இருந்தால் அதற்கு எந்த பணி விதி ஒப்புதல் அளிக்கிறது? என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, அதற்கு விளக்கம் அளிக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரப்பன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக மாநகராட்சிக்கு என தனி விதிகள் இல்லை எனவும், பள்ளிக்கல்வித் துறை விதிகளே பின்பற்றப்படுவதாகவும் சென்னை மாநகராட்சி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீதத்தை நேரடி தேர்வு மூலம் நிரப்ப வேண்டும் என்ற போதும், கடந்த 10 ஆண்டுகளாக நேரடி தேர்வு நடத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டி, தற்போது காலியாக உள்ள 499 ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீத பணியிடங்களான 243 பணியிடங்களை நிரப்பக் கோரி இரு வாரங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கடிதம் எழுத சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.