சென்னை:நாட்டின் 76-வது சுதந்தர தினம், விஜய தசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 22 மற்றும் 29-ஆம் தேதிகளில் தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கக் கோரி ஆர்.எஸ்.எஸ். சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் மற்றும் குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் தங்களது வாதத்தில், அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அளித்த விண்ணப்பத்தில் போதிய தகவல்கள் குறிப்பிடவில்லை எனவும், பேரணிக்கு ஆர்.எஸ். எஸ். அனுமதி கோரிய அதே காலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் பேரணி மற்றும் போரட்டங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி கோரும் வழித்தடத்தில் மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளதாகவும் அனுமதி கோரிய விண்ணப்பத்தில் அகண்ட பாரதம் கட்டமைப்போம் என கூறியுள்ளதாகவும், அந்த வரைப்படத்தில் மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை இணைத்துள்ளதாக தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, அதனால் அரசுக்கு என்ன பிரச்னை? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம், இது மிகவும் முக்கியமான விவகாரம் எனவும் இது குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த வேண்டும். பேரணியால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதாகவும், இந்த பேரணியால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது எனவும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ். சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஜி.ராஜகோபாலன், என்.எல்.ராஜா மற்றும் ஜி.கார்த்திகேயன் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் தங்களது வாதத்தில், கடந்த முறை பேரணிக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் அப்படி வழங்கவில்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பு என தெரிவித்தனர்.
தற்போதைய வாதத்தையே கடந்த முறையும் காவல்துறை முன் வைத்ததாகவும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய கட்டுப்பாடுகளுடன் தான் உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளாக ஆர்.எஸ்.எஸ்.சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஏதோ ஒரு காரணத்தை அரசு கூறி வருவதாகவும் அகண்ட பாரதம் அமைப்பது என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை என கூறப்பட்டது. அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமையை எந்த காரணமும் இன்றி மறுக்ககூடாது எனவும், ஜாதகத்தை தவிர அனைத்து தகவல்களும் போலீசால் கேட்கப்பட்டுள்ளதாக ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கூறினர்.