சென்னை: அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டது தொடர்பாக எடுக்கப்பட்ட மறு ஆய்வு மனுக்களை விசாரிக்க, உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தரப்பிடம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயசந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2006 மே 15 முதல் 2010 மார்ச் 31 வரையிலான திமுக ஆட்சியில், அமைச்சர் தங்கம் தென்னரசு 76 லட்சத்து 40 ஆயிரத்து 443 ரூபாய் சொத்து குவித்ததாக, கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 14 தேதி தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
அந்த வழக்கு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தங்கம் தென்னரசு மற்றும் அவரின் மனைவி ஆகியோரை விடுவித்து உத்தரவிட்டது.