சென்னை: கலைமகள் சபா என்னும் நிதி நிறுவனம் பொதுமக்களிடம் பணம் பெற்று அதை ரியல் எஸ்டேட் நடவடிக்கைகளில் முதலீடு செய்தது. மொத்தம், ஐந்து லட்சத்து 33 ஆயிரத்து 356 உறுப்பினர்கள் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தனர். இதை வைத்து தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கலைமகள் சபா வாங்கி இருந்தது.
இந்த நிலையில், நிறுவனத்துக்கு எதிராக முறைகேடு புகார் அளிக்கப்பட்டதையடுத்து கலைமகள் சபா நிர்வாகத்தைக் கவனிக்கச் சிறப்பு அலுவலரைத் தமிழ்நாடு அரசு நியமித்தது.
1999ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் ஒரு வழக்கறிஞர், சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு நிர்வாகத்தை கவனிக்கவும், சொத்துகளை விற்று உறுப்பினர்களுக்கு உரிய முதலீட்டுத் தொகை வழங்கவும் உத்தரவிட்டப்பட்டது.
1999ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவின் அடிப்படையில், கலைமகள் சபாவின் சொத்துகள் விற்கப்பட்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுக்குப் பணம் திருப்பி கொடுக்கப்பட்டது. தற்போது இந்த நிறுவனத்தின் நிர்வாகத்தை கவனிக்கும் பணியில் ஹரிகரன் என்பவர் மட்டுமே ஈடுபட்டிருக்கிறார்.
இந்த நிலையில் கலைமகள் சபா நிறுவனத்துக்குச் சொந்தமான நிலங்களை விற்று தங்கள் உறுப்பினர்களுக்கு பணம் வழங்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் கலைமகள் சபா உறுப்பினர்கள் பாதுகாப்புச் சங்கம் சார்பில் 2006ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது.