சென்னை: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஜெகதளா என்ற கிராமத்தில் கடந்த 1978ஆம் ஆண்டில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த எம்.குப்பன் என்பவருக்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்கி, அதை வேறு யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியர் நிபந்தனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த நிலத்தில், 26.12 சென்ட் நிலத்தை கல்லூரி வாசல் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த பூஜா பட், கடந்த 1999ஆம் ஆண்டு வாங்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை நடிகை பூஜா பட் வாங்கியது செல்லாது என்றும், அந்த நிலத்தை அரசுக்கு திருப்பி ஒப்படைக்க வேண்டுமென்றும் கோத்தகிரி வட்டாட்சியர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து நடிகை பூஜா பட் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி கோத்தகிரி வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை எதிர்த்து பூஜா பட் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீடு மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி நிலத்தை மீட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பூஜா பட் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி நிலம் இன்னும் பூஜா பட் வசம் தான் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் நிலத்தை மீட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 8 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.