தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முரசொலி அலுவலக நில விவகாரம்; தேசிய பட்டியல் சமூகத்தினருக்கான ஆணையம் விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி - திமுக நாளிதழ்

Murasoli trust land issue: முரசொலி அறக்கட்டளை நிலம் பஞ்சமி நிலமா என தேசிய பட்டியல் சமூகத்தினருக்கான ஆணையம் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணையை தொடரலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MHC Direct to NCSC issue fresh notice on Murasoli trust land issue
முரசொலி அலுவலக நிலம் விவகாரம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 11:56 AM IST

Updated : Jan 10, 2024, 2:21 PM IST

சென்னை:திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான "முரசொலி"-இன் அறக்கட்டளை சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட் (1,825 சதுர அடி) நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன், கடந்த 2019ஆம் ஆண்டு தேசிய பட்டியல் சமூகத்தினருக்கான ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் மீதான விசாரணைக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்றும், சொத்துக்களின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால், பட்டிலினத்தவர் ஆணையம் விசாரிக்க முடியாது என முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், முரசொலி சொத்து மாதவன் நாயர் என்கிற நில உரிமையாளரிடம் இருந்து அஞ்சுகம் பதிப்பகத்திற்கு விற்பனை பத்திரம் மூலம் வாங்கப்பட்டுள்ளதாகவும், 1974ஆம் ஆண்டு முதல் அந்த நிலத்தின் உரிமை முரசொலி அறக்கட்டளையின் வசம்தான் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணையில் உள்ளது. அப்போது, முரசொலி அறக்கட்டளை தரப்பில், பட்டியல் சமூகத்தினருக்கான மக்களின் உரிமைகள் பறிக்கப்படும்போதுதான் எஸ்.சி ஆணையம் தலையிட்டு தீர்வு காண முடியும் என்றும், உரிமையியல் வழக்கு தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றங்கள்தான் தீர்வு காண முடியும் என தெரிவிக்கப்பட்டது.

பட்டியல் சமூகத்தினருக்கான ஆணையத்தின் தரப்பில், பஞ்சமி நிலம் குறித்த புகாரைத்தான் விசாரிக்க வேண்டும் என்பதை உணர்ந்து விசாரணை மட்டுமே நடத்துவதாகவும், சொத்தின் மீதான உரிமை யாருக்கு உள்ளது என தீர்மானிக்கும் வகையில் நீதிமன்றத்தின் பணியை ஆணையம் செய்யாது என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, இந்த வழக்கு ஜனவரி 4ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வருவாய்த்துறை சார்பில், நுங்கம்பாக்கம் பதிவாளர் அலுவலக 1952ஆம் ஆண்டு ஆவணங்களின் படி, அந்த நிலம் பஞ்சமி நிலம் இல்லை. ரயத்துவாரி நிலம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சம் நிலம் என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 1912-க்கு முன் நிலம் யாருக்குச் சொந்தமானதாக இருந்தது, அப்போது நிலம் என்னவாக இருந்தது என வருவாய்த் துறைக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு, 50 ஆண்டு ஆவணங்கள் மட்டுமே இருப்பதாகவும், மற்ற ஆவணங்கள் கிடைக்கவில்லை எனவும் வருவாய்த்துறை தெரிவித்தது.

தொடர்ந்து, முரசொலி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பஞ்சமி நிலமாக ஆவணங்கள் இருந்தால் பதிவுத்துறையில் யாருடைய பெயருக்கும் பட்டா மாறுதல் பதிவு செய்ய முடியாது. எந்த சந்தேகமும் இல்லாத நிலையில் மட்டுமே பட்டா மாறுதல் செய்ய அனுமதி வழங்கப்படும்.

பட்டியல் சமூகத்தினருக்கான ஆணையம் தரப்பில், புகார்கள் வரும் பட்சத்தில், அதை விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. உத்தரவுகள்தான் பிறப்பிக்க முடியாது. பட்டியல் சமூகத்தினருக்கான மக்களின் நலன் பாதிக்கப்படும்போது, விசாரணை நடத்தப்படுவது சாதாரணமான நடைமுறை, புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்பு தொடர்ந்து விசாரணை நடத்த ஆணையம் பரிந்துரை செய்யும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில், இன்று (ஜன.10) தீர்ப்பளித்த நீதிபதி, சீனிவாசன் மீண்டும் ஆணையத்தில் புகார் அளிக்கலாம். அதன் மீது தேசிய பட்டியல் சமூகத்தினருக்கான ஆணையம் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணை செய்யலாம். அதற்கு எந்த தடையும் இல்லை என தீர்ப்பளித்துள்ளார்.

இதையும் படிங்க: போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் எதிரான வழக்கு; இன்று முதல் வழக்காக விசாரணை!

Last Updated : Jan 10, 2024, 2:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details