சென்னை: சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் என்ற இளைஞர் கடந்த 2015ஆம் ஆண்டு ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் (42) உள்ளிட்ட 10 பேருக்கு, மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவரது கல்லூரி தோழியான சுவாதி உடன் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சென்றிருந்துள்ளார். இரவு நீண்ட நேரம் ஆகியும் கோகுல்ராஜ் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடி பின்னர் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.
இது தொடர்பாக திருச்செங்கோடு போலீசார் விசாரித்து வந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே தொட்டிப்பாளையம் ரயில்வே தண்டவாளத்தில் தலை, நாக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனை அடுத்து திருச்செங்கோடு நகர காவல்நிலைய போலீசார் ஆள் காணவில்லை என வழக்கு பதிவு செய்து இருந்த நிலையில், பின்னர் ரயில்வே தண்டவாளத்தில் உடல் கிடந்ததால் சந்தேக மரணம் என ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
பின்னர் இரண்டு வழக்குகளையும் அந்த மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணு பிரியா விசாரணைக்கு எடுத்து வழக்கை விசாரித்து வந்தார். முதலில் இது தற்கொலையாக கருதப்பட்ட நிலையில், கோகுல்ராஜின் உடலை உடற்கூராய்வு செய்த போது அது கொலை என்பது தெரியவந்தது.
மேலும் கோகுல்ராஜ் அவரது தோழி சுவாதி உடன் கோயிலில் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த யுவராஜ் உள்ளிட்டவர்கள் கோகுல்ராஜை மிரட்டி அங்கிருந்து அழைத்துச் சென்றிருந்தது அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகி இருந்துள்ளது. கோகுல்ராஜை மிரட்டி அழைத்துச் சென்றவர்கள் ஒன்பது மணி நேரமாக அவரை சித்திரவதை செய்து அவர் நாக்கினை துண்டித்து, தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் யுவராஜ் உள்ளிட்டவர்கள் தலைமறைவாகி உள்ளனர். மேலும் தலை மறைவான யுவராஜ் அவ்வப்போது ஆடியோ வெளியிடுவதும் பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுப்பதுமாக இருந்துள்ளார். 100 நாட்களாக தலைமறைவாக இருந்தவர் பின்னர் போலீசில் சரன் அடைந்தார். இந்நிலையில் வழக்கின் விசாரணை அதிகாரியான டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார்.
டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலைக்கும் யுவராஜ் தார் காரணம் எனக் கூறப்பட்ட நிலையில், விஷ்ணு பிரியாவின் தற்கொலைக்கு உயர் அதிகாரிகளின் டார்ச்சர் தான் காரணம் என யுவராஜ் தெரிவித்து இருந்தார். இதுகுறித்த வழக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கு கடந்த 2019ஆம் ஆண்டு மதுரை மாவட்ட வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி, 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் கடுத்துக்களைக் கேட்டார்.
10 பேரும் தாங்கள் நிரபராதிகள் என முறையிட்டனர். கோகுல்ராஜின் தாயார் சித்ரா தனது மகனின் படுகொலைக்கு காரணமாகவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என மன்றாடினார். பின்னர் யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அருண்குமார் (29), சிவக்குமார் (43), சதீஷ் குமார் (33), ரகு (எ) ஸ்ரீதர் (28) ஆகியோருக்கு இரண்டு ஆயுள் தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், சந்திரசேகரன் (51) என்பவருக்கு ஆயுள் தண்டனையும், பிரபு (41), கிரிதர் (30) ஆகியோருக்கு 1 ஆயுள் தண்டனையும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக கூடுதலாக 5 ஆண்டுகள் மற்றும் 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. கொலை, கூட்டுசதி, ஆள்கடத்தல், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ், இவர்களுக்கு நீதிபதி தண்டனையை அறிவித்திருந்தார்.
தண்டனையை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். விடுதலை செய்யப்பட்ட 5 பேருக்கும் தண்டனை வழங்ககோரி கோகுல்ராஜின் தாயார் சித்ரா மேல்முறையீடு செய்தார். வழக்கிற்காக கோகுல்ராஜின் தோழி சுவாதியிடம் நீதிபதிகள் விசாரணை நடத்திய போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் அவரை பிறழ்சாட்சியமாக அறிவித்த நீதிபதிகள் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் மேல்முறையீடு வழக்கு விசாரணையின் போது கோகுல்ராஜை, யுவராஜ் மற்றும் அவரது ஆட்கள் கொலை செய்ததற்கான ஆதாரம் இருப்பதாக தெரிவித்த கோகுல்ராஜ் தரப்பு வழக்கறிஞர், யுவராஜ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கோகுல்ராஜும் சுவாதியும் பேசிக் கொண்டிருந்த போது தான் விசாரித்ததாக தெரிவித்து உள்ளார். மேலும் கோகுல்ராஜை அங்கிருந்து மிரட்டி அழைத்துச் செல்லும் வீடியோ ஆதாரங்களும் இருப்பதாக வாதிட்டனர்.
இதனை அடுத்து நீதிபதிகள் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதி திருச்செங்கோடு கோயிலுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் சுவாதியும் கோகுல்ராஜும் கோயிலுக்குள் வருவதும், யுவராஜ் அவரது ஆட்களுடன் கோயிலுக்குள் வருவதும் பதிவாகி இருந்துள்ளது. பின்னர் கோகுல்ராஜ் உடல் கிடந்த இடத்தையும் நீதிபதிகள் பார்வையிட்டனர்.
அப்பீல் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்றைய தினம் தீர்ப்பினை உயர் நீதிமன்ற நீதிபதி வாசித்தார். மதுரை நீதிமன்றம் யுவராஜ் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு அளித்த தீர்ப்பினை உறுதி செய்து தீர்ப்பளித்தார். மதுரை வன்கொடுமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார். யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்ததோடு மேல்முறையீட்டு மனுக்களையும் நீதிபதி டிஸ்மிஸ் செய்தார்.
இதையும் படிங்க: Wrestlers Protest : பிரிஜ் பூஷன் சிங்கிற்கு 3 ஆண்டுகள் சிறை? டெல்லி போலீசார் பதில்!