தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக பொதுச் செயலாளர் விவகாரம்; சசிகலா நீக்கத்தை உறுதி செய்து நீதிமன்றம் தீர்ப்பு! - சென்னை செய்திகள்

MHC dismissed the VK Sasikala Appeal: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், சசிகலா நீக்கத்தை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

Madras High court dismissed the VK Sasikala Appeal regarding removal from AIADMK
சசிகலா நீக்கத்தை உறுதி செய்து நீதிமன்றம் தீர்ப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 12:08 PM IST

சென்னை:அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு மறைந்த பிறகு, அவரது தோழியான வி.கே.சசிகலாவை இடைக்கால பொதுச் செயலாளராகவும், டி.டி.வி.தினகரனை துணை பொதுச் செயலாளராகவும் அதிமுகவினர் தேர்ந்தெடுத்தனர்.

இதனையடுத்து சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 2017ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுவில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் பின்னர் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பதவி வகித்து வந்தனர்.

இதையடுத்து, கட்சியில் இருந்தும், இடைக்கால பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கியது தொடர்பான தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி, சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அதிமுகவில் உரிமை கோர சசிகலாவுக்கு உரிமை இல்லை என உத்தரவிட்டு, அவரது கோரிக்கை நிராகரித்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சசிகலா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது, சசிகலா தரப்பில் மூத்த வழக்‍கறிஞர் ஜி. ராஜகோபாலன் ஆஜராகி, “கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டமானது சட்ட விதிகளின்படி கூட்டப்படவில்லை.

அந்த கூட்டத்தில் அவர்களாகவே ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யபட்டதாக” தெரிவித்தார். முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தபோது கூட எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனவும், சசிகலா தற்போது வரை அதிமுகவில் உறுப்பினராக உள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததுதான்” என தெரிவித்தார்.

அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், விதிகளின் படி நடைபெற்ற பொதுக்குழு என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உறுதி செய்துள்ளதாகவும், கட்சியின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழு விதிகளின்படி கூடி தீர்மானம் நிறைவேற்றியதாகவும், எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல, ஆகையால் சசிகலா மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (டிச.05) தீர்ப்பளித்த நீதிபதிகள், யாரையும் நீக்கும் அதிகாரம் தலைமை கழகத்துக்கு (அதிமுக தலைமை) உள்ளதால், சசிகலா நீக்கத்தை உறுதி செய்து, சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, உரிமையியல் நீதிமன்ற உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்துள்ளனர்.

இதையும் படிங்க: மிக்ஜாம் புயல்; கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றாக திரள வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு!

ABOUT THE AUTHOR

...view details