சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா, முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை நியமித்து முந்தைய அதிமுக அரசு உத்தரவிட்டது.
இந்த ஆணையத்தின் விசாரணையை எதிர்த்து சூரப்பா தாக்கல்செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணை ஆணைய அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கத் தடைவிதித்து கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது.
சூரப்பா மீதான புகார் குறித்து விசாரணை சூரப்பா மீதான குற்றச்சாட்டுகள்
இந்நிலையில் சூரப்பா தொடர்ந்த வழக்கு, நீதிபதி பார்த்திபன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சூரப்பா மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணையத்தின் அறிக்கையைத் தமிழ்நாடு அரசு தாக்கல்செய்தது.
இதையடுத்து நீதிபதி, "சூரப்பா மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணையத்தின் மீதான தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? முன்னாள் துணை வேந்தர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த நடவடிக்கைகளைத் தொடரப் போகிறீர்களா? மனுதாரர் தொடர் அச்சத்திலேயே இருக்க முடியுமா? இது ஊழலாக இருந்தால் விட மாட்டோம்; இது குறித்து அலுவலர்களிடம் கலந்து பேசி விளக்கமளிக்க வேண்டும்" என்றார்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து விளக்கம் பெற்றுத் தெரிவிப்பதாகக் கூறியதை அடுத்து, விசாரணையை டிசம்பர் 23ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: