சென்னை:அதிமுக பொது செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் பொது செயலாளராக வி.கே. சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனும் அதிமுக பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பின்னர், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தன்னை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்ற உரிமையியல் நீதிமன்றம், சசிகலாவை நீக்கியது செல்லும் என உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி எஸ். சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது.