சென்னை:அதிமுக ஆட்சியில் சுடுகாட்டுக் கூரை அமைத்ததில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் செல்வகணபதி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 1991-1996ஆம் ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்தவர், டி.எம்.செல்வகணபதி. அப்போது ஜவஹர் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் ஆச்சார்யலு, எஸ்.சத்தியமூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. விசாரணைக்குப் பின், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், சுடுகாட்டு கூரை அமைத்ததில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, 23 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆச்சார்யலு, எஸ்.சத்தியமூர்த்தி உள்ளிட்டோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கு நேற்று (நவ.9) நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அதில், சி.பி.ஐ தரப்பில் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் சீனிவாசன் ஆஜராகி வாதிட்டார். இதனையடுத்து, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பலர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க:மகளிர் உரிமைத் தொகை; இன்று 7 லட்சம் பேருக்கு ரூ.1,000 வரவு.. முதலமைச்சர் தலைமையில் விழா!