சென்னை:இந்து முன்னணி நிர்வாகிகள் மனோகர், கிஷோர்குமார், V.P.ஜெயக்குமார் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று (அக்.12) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.வி.ராமானுஜம், அமைச்சர்களின் பேச்சு விவரங்களை பென்டிரைவில் தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அதனை சிடி-யாக தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் தனது வாதத்தில், “அமைச்சர் உதயநிதியின் பேச்சு அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. கருத்து சுதந்திரம், அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக பேசுவதை அனுமதிக்கவில்லை. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது தான்” என்றார். மற்றொரு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால், “ஒரு குறிப்பிட்ட மதத்தை விமர்சித்ததன் மூலம் அமைச்சர், மதச்சார்பற்ற தன்மையை இழந்து விட்டார். அனைத்து சமூக மக்களின் உரிமைகளை பாதுகாப்பதாக கூறி பதவியேற்ற அமைச்சர், சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கரோனா போல் ஒழிக்க வேண்டும் என பேசியுள்ளார். இதன்மூலம் அவர் அரசியலமைப்புச் சட்டத்தை மீறியுள்ளார்” என வாதிட்டார்.
பின்னர் மூத்த வழக்கறிஞர் கார்த்திகேயன் கூறுகையில், “தற்போது அமைச்சர்களாக இருக்கும் இவர்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்காது என்பதால் இந்த நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம். இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர் மட்டுமே அறநிலையத் துறையில் பணியாற்றமுடியும் என அறநிலையத் துறை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. சனாதன தர்மத்தின் அடிப்படையில் உள்ள 40 ஆயிரம் கோயில்களை நிர்வகிக்கும் இந்து சமய அறநிலையத் துறைக்கு அமைச்சராக உள்ளவர், சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டதன் மூலம் தனது துறைக்கு அமைச்சராக நீடிக்கும் தகுதியை இழந்து விட்டார்” என வாதிட்டார்.