சென்னை:சனாதனம் ஒழிப்பு மாநாட்டில், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனப் பேசியதாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கின்றனர் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி, இந்து முன்னணி நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.
அந்த வழக்குகள், நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் உதயநிதி தரப்பில் கடந்த விசாரணையில் அமைச்சரை எந்த அடிப்படையில் பதவி நீக்கம் செய்யலாம் என்ற காரணங்களை முன்வைத்து தொழில்நுட்ப அடிப்படையில் வாதம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை இன்று (அக்.31) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உதயநிதி தரப்பில் ஆஜாரான வழக்கறிஞர், மனுதாரர் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில், இந்த வழக்கு தொடர்பாகத் தவறான அரசியல் பிரச்சாரம் செய்து வருகிறார் எனக் குற்றம் சாட்டினார். போதிய ஆதாரங்கள் இல்லாமல் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், விளக்கமளிக்க போதிய அவகாசம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இதனை அடுத்து, அனைத்தைத் தரப்பிலும் விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை நவம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க: "சொத்துவரி! இன்றே கடைசி நாள்.." - சென்னை மாநகராட்சி அறிவிப்பு..