சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தலுக்குத் தடை விதிக்க கோரி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாத பழனிச்சாமி இந்த வழக்கைத் தாக்கல் செய்ய எந்த அடிப்படை உரிமையும் இல்லை, கட்சி நிர்வாகிகளைத் துன்புறுத்தும் நோக்கில் அற்ப காரணங்களுக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். கட்சி உறுப்பினராக இல்லாத நபர், கட்சியின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது எனவும், கட்சி நலனுக்கு எதிராகச் செயல்பட்டதால் வெளியேற்றப்பட்ட பழனிச்சாமி தாக்கல் செய்துள்ள இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
இதற்கு பதிலளித்து கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்த பதில் மனுவில், கட்சியில் இருந்து தன்னை நீக்கியபோது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காததால், தன்னை நீக்கியதே சட்டவிரோதம் என்பதால், இந்த வழக்கைத் தாக்கல் செய்ய தனக்கு அடிப்படை உரிமை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.