தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேட்டூர் கொலை வழக்கு: குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிறப்பித்த ஆணையை ரத்து செய்த உயர்நீதிமன்றம்! - ragunathan

மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றவரை முன் விரோதம் காரணமாக கொலை செய்த இருவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சேலம் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

madras high court
சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

By

Published : Jul 5, 2023, 7:53 PM IST

சென்னை:சேலம் மாவட்டம், மேட்டூர் காவல் நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு அரசு மருத்துவமனை ஊழியர் முனுசாமி என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரில், "மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதியன்று இரவு ரகுநாதன் (வயது 28) என்பவர் சிகிச்சை பெற வந்தார். அவருடன் ராஜா, மகேந்திரன் ஆகிய இருவரும் வந்தனர். சிகிச்சை பெற வந்த ரகுநாதனிடம் மருத்துவர் மற்றும் செவிலியர் உடல் நலம் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது வெள்ளையன், மூர்த்தி, பிரகாஷ் ஆகிய 3 பேரும் மருத்துவமனைக்கு வந்தனர். ரகுநாதனின் கை, கால்களை மூர்த்தியும், பிரகாசும் பிடித்துக் கொள்ள வெள்ளையன் கத்தியால் அவரது மார்பில் குத்தினார். பின்னர், ரகுநாதனின் குரல்வளையை கத்தியால் அறுத்தார். அவர் துடித்துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் சம்பவம் நடந்த இடத்திலிருந்து மூன்று பேரும் தப்பித்து சென்று விட்டனர்" என்று முனுசாமி புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்குப் பதிவு செய்து வெள்ளையன் உள்பட 3 பேரையும் உடனடியாக போலீசார் கைது செய்தனர். இவர்களில் வெள்ளையன், மூர்த்தி ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம், காவல்துறையினர் பரிந்துரை செய்தனர்.

இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டு வெள்ளையனையும், மூர்த்தியையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி வெள்ளையன் மனைவி ரம்யா மற்றும் மூர்த்தியின் தாயார் கோவிந்தம்மாள் ஆகியோர் தனித்தனியாக ஆட்கொணர்வு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சமுதாயத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவார்கள் என்று தான் மனுதாரர்கள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒரு ஆண்டுக்கு சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அந்த உத்தரவு உடனடியாக பிறப்பிக்கவில்லை எனவும் அக்டோபர் 25ஆம் தேதி கைது செய்யப்பட்டவர்களை டிசம்பர் 5ஆம் தேதி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:தேசியவாத காங்கிரஸ் கட்சி பெயர், சின்னம் யாருக்கு? இந்திய தேர்தல் ஆணையம் இறுதி முடிவு!

ABOUT THE AUTHOR

...view details