சென்னை: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எட்டாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு, 14 வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற விதியைச் சுட்டிக்காட்டி, 14 வயது 2 மாதங்களான மாணவிக்கு தாம்பரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கை வழங்க பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து, சிறுமியின் பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, கேந்திரிய வித்யாலயா நிர்வாகம் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, மாணவர் சேர்க்கைக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது என்பது நிர்வாகத்தின் முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும், மாணவி 30 கிலோ மீட்டர் பயணித்து வேறு பள்ளியில் படிக்கிறார் என்பதற்காக விதிகளைத் தளர்த்த முடியாது எனவும் தெரிவித்தார்.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, மாணவர் சேர்க்கை விதிகள், கல்வெட்டுபோல கற்களில் பொறிக்கப்பட்ட ஆணை என்றோ, அதற்கு வளைந்து கொடுக்கும் தன்மை இல்லை என்றோ கருத வேண்டுமா? அல்லது சாலமனின் 10 கட்டளைகள் என கருத முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.