சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் கடந்த 2010 - 2011ஆம் ஆண்டுகளில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட இவர்களுக்கு, மாதம் 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், உதவிப் பேராசிரியர்களுக்கான பணியை செய்து வரும் தற்காலிக ஆசிரியர்கள், பணி வரன்முறை செய்யக் கோரியும், ஏற்கனவே நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்காமல், புதிதாக தற்காலிக ஆசிரியர்கள் தேர்வுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புதிதாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது என கூறியதுடன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து தற்காலிக ஆசிரியர்கள் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு, நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு மாறாக, தற்போது ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, அண்ணா பல்கலைக்கழகம், கடந்த ஆகஸ்டில் அறிவிப்பாணை வெளியிட்டதாகவும், அதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாகவும் நீதிபதிகளின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.