சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என சேகர் என்பவர் 2021-இல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கானது நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ராஜசேகர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், “பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்த ஆயிரத்து 87 ஆக்கிரமிப்பாளர்களை மறு குடியமர்வு செய்ய 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:“ஒரு லட்சம் பேர் அரசு முத்திரைகளை விதிகளை மீறி பயன்படுத்தி உள்ளனர்” - தமிழ்நாடு அரசு தகவல்!
அதன்படி, 149 பேருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டு, மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது” என தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அரசின் அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், “ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்தாமல், அவர்களுக்கு ஆதரவாக இடம் ஒதுக்குவது ஆக்கிரமிப்பாளர்களை மேலும் ஊக்கப்படுத்துவதாகும். ஆக்கிரமிப்பாளர்கள் மீது கருணை காட்டாமல் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்தாமல் ஊக்கப்படுத்தினால், 2019-ஆம் ஆண்டு நீதிமன்ற பிறப்பித்த உத்தரவின்படி, ராணுவத்தினர் மூலம் ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த உத்தரவிட நேரிடும்” எனத் தெரிவித்தனர். மேலும், ஆக்கிரமிப்பாளர்கள் இந்த நாட்டின் துரோகிகள் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீர் பஞ்சம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க:“கொண்டாடப்பட வேண்டிய செவிலியர்களுக்கு வீதியில் போராடும் நிலை” - முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்