சென்னை: சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் என்.மகேந்திரபாபு என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட டி.எம்.கே ஃபைல்ஸ் தொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றம் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியதால், ஜூலை 14ஆம் தேதி அண்ணாமலை நேரில் ஆஜரானபோது, நீதிமன்ற அறையில் அவரது சார்பில் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆஜராகி இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற அறை மட்டுமல்லாமல் வளாகம் முழுவதும் பாஜக வழக்கறிஞர்களாக நிரம்பி வழிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் நீதிமன்ற பணிகள், நீதிபதியின் பணி ஆகியவை பாதிக்கப்படுவதுடன், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறி, கடந்த காலங்களில் உயர் நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியும், எழும்பூர் நீதிமன்றத்தில் தனியார் பத்திரிகை ஆசிரியர் கோபாலும் ஆஜரானபோது கூட்டம் குழுமியதை சுட்டிக் காட்டியுள்ளார்.
எனவே, இது போன்று விஐபிக்கள் மற்றும் விவிஐபிக்கள் ஆஜராகும் வழக்குகளில், அவர்களுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜராகும் வகையில் விதிகளை வகுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர், தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு டிஜிபி ஆகியோருக்கு ஜூலை 17ஆம் தேதி கோரிக்கை மனு அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் அனுப்பிய அந்த கோரிக்கை மனுவை பரிசீலித்து உரிய முடிவெடுக்கும்படி உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மற்றும் புதுவை பார்கவுன்சில் சார்பாக வழக்கறிஞர் சந்திரசேகர் ஆஜராகி இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 11ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க:“ஒரே நேரத்தில் இந்தியாவிலும், இங்கிலாந்திலும் பொறியியல் படிக்கலாம்” - அண்ணா பல்கலைக்கழகம் புதிய திட்டம்!