சென்னை: தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், கடந்த 2011ஆம் ஆண்டு அளித்த புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், காவல் துறையினர் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகக் கூறியுள்ளார்.
மேலும், திமுக அரசுக்கு எதிராகவும், திராவிட கொள்கைக்கு எதிராகவும் கருத்துக்கள் கூறி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 2011ஆம் ஆண்டில் முடிக்கப்பட்ட வழக்கை, 12 ஆண்டுகளுக்குப் பின், அரசியல் உள்நோக்கத்துடன் மீண்டும் விசாரிப்பதால் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.