சென்னை: மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மருத்துவமனையில் மரணமடைந்த நிலையில், 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சைகளும், அவரது மரணமும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதை அடுத்து, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் குழு அமைத்து கடந்த 2017ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, சுமார் ஐந்து ஆண்டுகள் விசாரணைக்குப் பின், ஆறுமுகசாமி ஆணையம், 2022 ஆகஸ்ட் 23ஆம் தேதி அரசுக்கு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிடக் கோரி தனியார் நாளிதழ் வேலூர், திருச்சி பதிப்புகளின் பதிப்பாளர் கோபால்ஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “இந்த அறிக்கையின் அடிப்படையில் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது, மருத்துவமனையில் வழங்கப்பட்ட சிகிச்சை மற்றும் மரணம் குறித்த சந்தேகங்களை தீர்க்கும் வகையில் முழுமையான, நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்” என குறிப்பிட்டுள்ளார்.