தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவர் பதிவு அபராதத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு - தமிழ்நாடு மருத்துவ கவுன்சில்

சென்னை: தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் மருத்துவர் பதிவைப் புதுப்பிக்காவிட்டால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் என்ற அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Feb 2, 2021, 8:59 AM IST

தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மருத்துவர்கள் பதிவுசெய்துள்ளனர். இவர்களின் பதிவை டிஜிட்டல்மயமாக்குவதற்காகவும், புதுப்பிக்கவும் 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டுமெனவும், பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் புதுப்பிக்கத் தவறினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமெனவும் கடந்தாண்டு டிசம்பர் 28ஆம் தேதி கவுன்சில் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து கவுன்சிலின் முன்னாள் தலைவர் பி. பாலகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், “கரோனா காலத்தில் உயிரையும் துச்சமென நினைத்து சேவையாற்றும் மருத்துவர்களை இன்னலுக்கு உள்ளாக்கும் வகையில் அபராதம் விதிக்கப்படுகிறது. தற்போதைய தலைவர் செந்தில் தலைமையிலான நிர்வாகிகள் மருத்துவர்களின் நலனைக் கருத்தில்கொள்ளாமல், நிதியைப் பெருக்குவதிலேயே குறியாக இருக்கிறது” எனக் குற்றஞ்சாட்டினார்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர். சி. கனகராஜ் முன்னிலையாகி மருத்துவர்களின் நலனைக் கருதாமல் பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டுமென கோரிக்கைவைத்தார்.

இதையடுத்து, இந்த வழக்கு குறித்து மத்திய, மாநில சுகாதாரத் துறை, தேசிய மருத்துவ ஆணையம், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ஆகியவை மூன்று வாரத்திற்குள் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: வனவிலங்கு உடல் கடத்தல் வழக்கு: மத்திய சுற்றுச்சூழல் இயக்குநர் பதிலளிக்க உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details