சென்னை:தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருச்சியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி மற்றும் சிபிஐ விசாரணை செய்தும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படாததால், மாநில போலீசாரே வழக்கை விசாரிக்க உத்தரவிடக் கோரி கே.என்.நேருவின் மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டி.எஸ்.பி. மதன், சென்னை சிபிஐ-யைச் சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் 11 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனையும் செய்யப்பட்டது. அதற்கான முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று(ஜூலை 17) விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பவம் நடந்து 12 ஆண்டுகள் ஆகின்றன, பல்வேறு விசாரணை அமைப்புகள் விசாரித்துவிட்டன, இந்நிலையில் நியாயம் கிடைக்கும் என இன்னும் நம்பிக்கை இருக்கிறதா? என மனுதாரர் தரப்பிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை திருப்தியளிப்பதாகவும், நியாயம் கிடைக்கும் என நம்புவதாகவும் கூறினார். வழக்குத் தொடர்பாக இதுவரை ஆயிரத்து 40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும், வழக்கில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.