கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்த குற்றச்சாட்டில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலை சேர்ந்த நாத்திகன் என்கிற சுரேந்திரன், செந்தில்வாசன், சோமசுந்தரம், குகன் ஆகியோரை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் கறுப்பர் கூட்டம் இணையதளத்தில் இருந்த 500க்கும் மேற்பட்ட காணொலிப் பதிவுகள் நீக்கப்பட்டதாக சென்னை சைபர் கிரைம் காவல் துறை தெரிவித்தது. இதையடுத்து அந்த யூடியூப் சேனலை சேர்ந்த நாத்திகன், செந்தில்வாசன் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நாத்திகனின் மனைவி கிருத்திகா, செந்தில்வாசன் ஆகியோர் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
அந்த வழக்குகளின் விசாரணையின்போது, கலாசாரம், நம்பிக்கை என்ற பெயரில் சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவும், கல்வியறிவின்மை, அறியாமையை ஒழிக்கவும் பல்வேறு தகவல்களை வெளியிட்டதற்காக குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது, கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.