சென்னை: புதுச்சேரியைச் சேர்ந்த சித்தார்த்தன் என்பவர் மருத்துவ மேற்படிப்பில் சேர்வதற்காக கடந்த 2017ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சியும் பெற்றுள்ளார். பின்னர், புதுச்சேரி மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தும், உரிய நேரத்தில் கட்டணம் செலுத்தவில்லை என்றும், கட்டாயப் பணி உத்தரவாதம் புரிவதாக உறுதியளிக்கவில்லை போன்ற காரணங்களைக் கூறி, சித்தார்த்தனுக்கு மாணவர் சேர்க்கை மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் ஆர்.கலைமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்த நிலையில், அதிக கட்டணம் செலுத்த வேண்டுமென கல்லூரி நிர்வாகம் கூறியதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, அடுத்த கல்வியாண்டிலேயே அந்த மாணவருக்கு வேறு கல்லூரியில் இடம் கிடைத்து, அவர் மருத்துவ மேற்படிப்பை முடித்து விட்டதாக புதுச்சேரி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர், மருத்துவ மேற்படிப்பை முடித்திருந்தாலும், 2017-2018ஆம் கல்வி ஆண்டில் அவருக்கு அனுமதி மறுத்தது தவறு எனக் கூறி, இதற்காக 15 லட்சம் ரூபாயை மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.